விருந்தோம்பல்

தமிழ் மக்களின் ஓர் அடையாளமாகக் கருதப்படுவது விருந்தோம்பல் பழக்கம். ஏழ்மையிலும் கூட ஒரு பகுதி தானியத்தைப் பயன்படுத்தாமல் பாதுகாத்து வைத்து, திடீரென்று வரும் வழிப்போக்கர்களுக்கு விருந்து படித்திடும் அழகிய பழக்கம் கொண்ட இனம் நமது தமிழினம். அன்பும் பண்பும் நமது வாழ்வியலின் முக்கிய பகுதிகளாக அமைந்ததால், விருந்தோம்பலுக்கு கூட பல இலக்கிய பாடல்களை படைத்துவிட்டுச் சென்றுள்ளனர் நமது முன்னோர்கள். விருந்தோம்பல் நமது அடையாளம் மட்டும் அல்லாமல், விலங்குகளிலிருந்து மனிதனாக வேறுபடுவதற்கு விளங்கும் அழகிய குணமும் கூட. 
ஆறறிவு கொண்டவன் பண்பட்டு, அன்புடன் வாழ வேண்டும்; பகிர்ந்து உண்ண வேண்டும்; பிறருக்கு உதவி செய்து  வாழ்க்கையைச் செம்மை செய்ய வேண்டும் என்று தமிழர் வாழ்வியல் முறை கூறுகிறது.

இன்றும் நமது ஊரில், விருந்தினர்களை உட்கார வைத்து விருந்து படைக்கும் பழக்கம் செழிப்போடு இருக்கின்றது. அத்தைகைய பழக்கத்தை நமக்கு ஊறி வளர்த்த முன்னோர்களின் பாடலைகளி இங்கு சுவைத்துப் பார்ப்போமே! நமது அடையாளத்தைக் கண்டு பெருமை படுவோம்!

 

தொல்காப்பியம் - 231
"விருந்தே தானும்புதுவது புனைந்த யாப்பின் மேற்றே"

உரை
வீட்டிற்கு வரும் புதியவர்களை இன்முகத்துடன் வரவேற்று உணவளிப்பது உயரிய பண்பாகும்.
பொருநராற்றுப்படை,74-78 

"கேளிர்போல கேள் கொளல் வேண்டிவேளாண்
வாயில் வேட்பக் கூறிகண்ணில் காண நண்ணுவழி
இரீஈபருகு அன்ன அருகா நோக்கமொடு"

உரை:
விருந்தினர்களிடம் நண்பர்கள் போல உரையாடி, அவர்கள் நமக்கு நெருக்கமானவர்கள் என்று உணர வைத்து , " ஈன்ற கன்றிடம் காட்டும் பசுவின் அன்பைப் போல " அவர்களுக்கு அன்பைப் பரிமாறி எலும்பு குளிரும்படி அன்பால் நெகிழச் செய்ய வேண்டும் என்று விருந்தினர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று கூறுகிறது 

 

குறள் 82:

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெ
னினும் வேண்டற்பாற் றன்று"

உரை:
விருந்தினர் வீட்டின் வெளிய இருக்க, சாவாமருந்தாகிய அமிழ்தமே வைத்திருந்தாலும் அதை தானே உண்பது நல்ல பழக்கம் அல்ல.
பெரும்பாணாற்றுப்படை

''மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி,
முகன்அமர்ந்துஆனா விருப்பில் தான்நின்று ஊட்டி !''

உரை:விண்மீன்கள் போல பல வகை உணவுகளை கிண்ணத்தில் நிரப்பி, 
விருந்தினரின் விருப்பத்தை அறிந்து அவர்கள் விரும்பியதை அன்போடு நோக்கி பரிமாற்ற வேண்டும்.
புறநானூறு - 316 

"நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன்;
இன்றுஇக்கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்".

உரை:

நேற்று வந்த விருந்தினருக்கு தலைவன் , தன் குடிப்பொருளான வாளை விற்று விருந்து படைத்தான். இன்று நான் ( தலைவி) யாழைப் பணையமாக வைத்து விருந்து படைத்தேன்" என்று வறுமையிலும் விருந்தோம்பல் படைத்தனர். 

மேலும் பல இலக்கியப் பாடல்கள் நமது முன்னோர்கள் பின்பற்றிய விருந்தோம்பல் முறைகளையும், பெருமைகளையும் கூறுகின்றது.
அரசனாய் இருந்தாலும் சரி, வறுமை வாட்டினாலும் சரி “பகுத்துண்டு வாழ்வதே வாழ்வு” என முன்னிறுத்தியதால் தான் தமிழனின் வாழ்வியல் முறை உலகின் சிறந்த வாழ்வியலாகத் திகழ்கின்றது.

பகுத்துண் டோம்பும் பரிவே போற்றி!

நன்றி!
-சமரசம்

Please share !

சமரசம்

நானும் உங்களை போல் ஒரு தமிழ்க் காதலன். தமிழ் பற்றிய தகவல்களை சேகரித்துப் பகிர்வதற்காகவும், சுய கருத்துக்களை என் எழுத்தின் மூலம் சொல்வதற்க்காகவும் இணையத்தில் எழுதுகிறேன். மேலும் சங்க இலக்கியங்கள், தமிழ் வரலாறு, கலை, கணினி ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவன்.