தமிழ்த்தாய் வாழ்த்து

உலகில் ஆயிரம் இனங்களும், தொழில்களும், இறை நம்பிக்கைகளும் உலாவ, தன் தாய் மொழியை உயர்ந்த இடத்தில வைத்து அதை வணங்கி வாழ்த்துவது தமிழினம் மட்டும் தான். அத்தகைய சிறப்புகளும் மனித வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தும் உள்ளடக்கிய ஒரு உயிர் மொழி தான் நமது தமிழ்! தமிழுக்கு சிறப்புப்பாயிரங்கள் தேடினால் அது கோடிக்கணக்கில் நமக்கு கிட்டும். நமது பாடத்திட்டத்தில் உள்ள தமிழ்த்தாய் வாழ்த்தினை இங்கு சுவைப்போம். நாளும் நமது தாய் மொழியைப் போற்றுவோம்!

புதுச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து:

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

- பாரதிதாசன்

தமிழ்நாட்டு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்:

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"

- மனோன்மணியம் பெ.சுந்தரனார்

 

நன்றி!
வாழ்க தமிழ்!

Please share !

சமரசம்

நானும் உங்களை போல் ஒரு தமிழ்க் காதலன். தமிழ் பற்றிய தகவல்களை சேகரித்துப் பகிர்வதற்காகவும், சுய கருத்துக்களை என் எழுத்தின் மூலம் சொல்வதற்க்காகவும் இணையத்தில் எழுதுகிறேன். மேலும் சங்க இலக்கியங்கள், தமிழ் வரலாறு, கலை, கணினி ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவன்.