தமிழ்ப் பெயர்

தமிழர் தமிழர் என்றும், மூத்த குடியென்றும், மொழிக்கான இனம் என்றும் சொல்லிக்கொண்டு நமது அடையாளத்தை எதாவது ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொள்வோம்.  இனத்தின் பெருமையை உலகம் புகழும்போது இதுவரை இனப்பற்று இல்லாதவர்கள் கூட புகழுக்காக இனப்பெருமையை சூடிக்கொள்ள கூட்டத்தில் சேர்ந்துகொள்வார்கள்(புகைப்படங்களுடன்) .

அனால், தாய்மொழியில் குழந்தைகளுக்கு பெயரிடமாட்டோம். அறிவுடைமைக்கு இலக்கியம் படைத்த இனத்தில் இருந்தும்,  ஒன்றுமே புரியாத மொழியில், நிகழ்ச்சிகளுக்கு ஓதுதல் செய்வோம். இப்படி ஒரு உச்சரிப்பு மற்றும் இலக்கண அடித்தளம் வேறு எந்தமொழிக்கும் இல்லை என அறிந்தும், பிறமொழிச் சொற்களை பயன்படுத்துவதை பெருமையாக நினைப்போம். பல்லாயிரம் வருடங்கள் பழமையான செம்மையான இலக்கியங்கள் நம்மிடையே இருந்தாலும், புகழாரம் சூடிக்கொள்ள வசனங்களில் மட்டும் பயன்படுத்துவோம். உணவும் உடற்பயிற்சியும் தான் மருந்தென நமது சித்த மருத்துவம் கூறியும், சுவைக்கு அடிமையாகி, பாரம்பரிய உணவுகளை காக்காமல் வேடிக்கைப்பார்ப்போம். எல்லாம் எங்களிடமிருந்து தான் வந்ததென பெருமை சொல்லிக்கொள்வோம், அனால் தகுதியான ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க மாட்டோம்.

 

இப்போது தாய்மொழியில் பெயரிடுவதைப் பற்றி பேசுவோம்.

நமது மொழியில் இல்லாத அழகிய சொற்கள் வேறு எங்கு கிடைக்கும்? பிறமொழிகள், சொற்களை வேறு மொழிகளிலிருந்து கடன்வாங்குவது போல நமது மொழிக்கு எங்கும் கடன் தேவை இல்லை. பல மொழிகளுக்கு உயிரும் சொற்களும் கடன் கொடுத்ததே தமிழ் தான் என தெரியுமா? அனைத்து புதிய சொற்களுக்கும் நமது மொழியிலேயே கலைச்சொற்கள் உருவாக்கும் திறன் படைத்த பெருமொழி நமது தமிழ் தான். திருவள்ளுவருக்கு கூட தெரியாத மென்பொருள், வன்பொருள், குறுந்செயலி ஆகிய கலைச்சொற்களை நாமே காலத்திற்கு தகுந்தவாறு உருவாக்கிக்கொண்டோம். ( derivative language ). பிற மொழிகளில் ஒரு எழுத்தின் உச்சரிப்பை வைத்து அந்த எழுத்தால் தொடங்கும் சொல்லின் உச்சரிப்பை சொல்ல முடியாது. அனால் தமிழில், எளிமையாக ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு வடிவம் தான். எழுத்தின் உச்சரிப்பைக் கற்றாலே, எந்த மொழி நாட்டவரும் எந்த சொற்களை வேண்டுமானாலும் எளிதாகப் படித்து காட்ட முடியும். அவ்வளவு எளிதான மொழி நமது மொழி.

ஒரு சீன நாட்டவர் நமது ஊரில் வாழ்ந்து வந்தார். எல்லோரும் தன் குழந்தைக்குப் பெயர்வைக்க சோதிடனிடம் செல்கிறார்கள் என, தானும் தன் குழந்தைக்கு பெயர் சூட்ட அறிவுரை கேட்க அவரிடம் சென்றார். சோதிடனோ எதோ ஒரு எழுத்து சொல்லி அதிலிருந்து பெயர் ஆரமித்தால் தான் உங்கள் பிள்ளை நன்றாகப் படிப்பான் என்று கூறினார். அனால் அந்த எழுத்து உச்சரிப்பு சீன மொழியில் இல்லை. அதனால் நமது மக்களிடம் கேட்டார் " சோதிடன் சொல்லும் எழுத்துக்கள் உங்கள் மொழியில் இருக்கிறதா?". அதற்க்கு நம் மக்கள் " இல்லை, ஆனாலும் சோதிடன் சொல்லும் எழுத்தை வைத்து தான் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கிறோம் என கூறினார்கள்.

சீனன் " சோதிடன் சோதிடம் படித்த மொழியில் இருந்து தான் எழுத்துக்களையும் சொற்களையும் கூறுவான். அதற்காக நாம் பிறமொழி எழுத்துக்களை பயன்படுத்தினால், நமது மொழி அழிந்துவிடும் என்ற அறிவு கூட உங்களுக்கு கிடையாதா?, இதன்மூலம், மொழியில் சிறிது சிறிதாக கலப்படம் ஏற்படும் என்று உங்களுக்கு தெரியாதா? இல்லை உங்கள் மொழியில் சொற்களும் எழுத்துக்களும், இலக்கண அடித்தளங்களை இல்லையா ?" என நகைத்து சிரித்தான். மேலும் " நானும் இவ்வாறு பயன்படுத்தினால், பிறகு எனது மகன், என் தாய்மொழி சொற்களைப் பயன்படுத்த காரணமே இல்லாமல் கூச்சப்பட்டு பிறமொழி சொற்களைத்தான் பயன் படுத்துவான். நான் உங்கள் நாட்டில் பிழைப்புக்காக மொழியை படிப்பனே தவிர, எனது பிள்ளைகளுக்கு பெயரிட படிக்க மாட்டேன். எனது தாய்மொழியில் எல்லா வளங்களும் இருக்க நான் வேறொரு மொழியில் பெயர்வைத்தால் நான் உங்களை விட முட்டாள் தானே!?

சொற்களுக்கு, பேசுவதற்கு, பாடுவதற்கு, உரைநடைக்கு, கவிதைக்கு, செய்யுளுக்கு, நகைச்சுவைக்கு, விடுகதைக்கு, பொருளதிகாரம்(வாழ்வியல்) என அனைத்திற்கும் இலக்கணம் கொண்டது நமது மொழி.

ஆயிரம் புலவர்கள் சொன்னாலும் தானே மெய்ப்பொருள் காண்பது தான் அறிவு என அறிந்தும், ஊரார் போகும் வழியிலே செல்லலாமா? அதற்க்கு  ஏன்  நாம் படிக்கணும்? படிப்பது வேலை புரிந்து பணம் ஈட்டுவதற்காக மட்டுமா? ? இல்லை நமது சிந்தனையை செம்மைப்படுத்துவதற்காகவா?

பிழைப்பதற்கும், மதங்களை வளர்க்க வந்தவர்களும் கூட பிழைப்பதற்கு தமிழைக் கற்று பின்பு தமிழின் அருமையை உணர்ந்து தமிழில் உள்ள சுவைகளை சுவைத்துச் தமிழில் பல காப்பியங்களைக் கூட படைத்தது சென்றனர்.

ஒரு இத்தாலி(சி யூ போப், 1908 ஆம் ஆண்டு ) நாட்டவர் தமிழ் மொழி மீது காதல் கொண்டு " நான் ஒரு தமிழ் மாணவன்" என்று அவரது கல்லறையில் பொரிக்கச் செய்தார்.

உலக மொழிகளில் மூத்த மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என அமெரிக்க மொழியியல் ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி கூறியுள்ளார்.

மூத்த மொழி என்றால், பழைய மொழி என்று பொருள் இல்லை. அது பல்லாயிரம் ஆண்டுகள் வளர்ந்து செதுக்கப்பட்டு, அழகிய சிற்பமாக பெரும் ஆற்றல் கொண்ட மொழியாக வளர்ந்திருக்கிறது. எவ்வளவு ஆராய்ச்சிகள் நடந்திருக்கும், எத்தனை குறைகள் நிறைகள் கண்டு திருத்தப்பட்டு பல வடிவங்கள் எடுத்திருக்கும். அவ்வளவு வளர்ந்து செழித்து எல்லாச் செல்வங்களையும் கொடுள்ளதால் தான் இனமும் மொழியும் இத்தனை ஆயிரம் ஆண்டுகள்  கடந்து வந்திருக்கிறது. (எத்தனையோ மொழிகள் இன்று பேச்சு வழக்கில் இல்லை; பலநூறு மொழிகளுக்கு எழுத்துவடிவம் இல்லை)

அக்காலத்தில் கேள்விக்கு பதிலாக ஒரு விடுகதையை சொல்லும் பழக்கம் இருந்ததாம். அதாவது அப்போது வெறும் இலக்கிய மொழியாக இல்லமால், கணிதம் மற்றும் சிந்தனை மொழியாக இருந்திருக்கிறது நமது தமிழ். தமிழ் அறிந்தவன் அனைத்தும் அறிந்தவன் என்பதால் தான் முப்பெரும் மன்னர்கள் கூட புலவர்களுக்கு தலைவணங்கி நடந்து சென்றனர். புறநானூற்றை எடுத்துப் பாருங்கள் ஔவையார் எத்தனைப் போர்களை தனது பேச்சின் மூலம் நிறுத்தியிருக்கிறார்கள் என்று.

“ராசா ராசா சோழன்” என்று சொல்லும்போது ராசா என்னும் சொல்லில் அன்பு கலந்திருக்கிறது. ஆனால் நாம் வடமொழியைக் கலந்து கூறும்போது மன்னன் என்ற திமிரு வரும். அன்பை ஊட்டி வளர்த்த மொழி  நமது மொழி. அம்மொழியை நாம் ஏன் பிற மொழி சொற்கள் கொண்டு கலந்து அழுக்கேற்ற வேண்டும்.  ஒரு ஆங்கிலன் அவனது பெயரில், ஒரே ஒரு எழுத்து மட்டும் வேற்று மொழி உச்சரிப்பை சேர்த்தால் எப்படி பொருந்தாக் கலவையாக இருக்கும். அப்படிதான் நாம் வைக்கும் கலப்பு பெயர்களும்

""கரத்தில் வேற்று மொழியினரை அவர்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைக்க சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா?

ழ-கரம் போல் ஒரு அழகிய உச்சரிப்பு வேறு எங்கு கிடைக்கும். ஆனாலும் வேறு எந்த மொழி மக்களும் யார் சொன்னாலும் ழகரத்தைக்கொண்டு பெயர்   வைக்கமாட்டார்கள். நாமோ மொழியை நேசிக்கும் இனம். ஆனால்? 

மொழி சிதைந்தால் வரலாறு சிதைக்கப்படும். ஏறு தழுவுதல் என்று சொல்லும்போது நமக்கும் மாட்டுக்கும் உள்ள உறவை பெருமை படுத்துகிறது.
அதுவே ஜல்லிக்கட்டு என்று சொல்லும்போது அது ஒரு போட்டியாகவும் மாட்டை அடுக்கும்செயலாகவும் பொருள் தருகின்றது..

அனைத்து சொற்களையும் தமிழிலே சொல்லும்போது எளிதாகவும் அன்பை ஊட்டுவதாக இருக்கும். அப்படிப்பட்ட மொழியைப் பெற்ற நாம் மொழிக்கான பெருமையை மட்டும் வேண்டும் என்கிறோமே தவிர எழுத்திலும் பேச்சிலும் தாய்மொழியை புறக்கணிக்கிறோம்.

மொழி சிதைவதால் எப்படி இன வரலாறு சிதையும், நமது குடும்பம் அழியும்?
நமது அலட்சியத்தால் தானே இன்று அனைத்து கோயில்களிலும், நிகழ்ச்சிகளிலும் புரியாத வேறு மொழியை பயன்படுத்துகிறார்கள். என்றாவது சிந்தித்திருக்கோமா ஏன் நமக்கு புரியாத ஒன்றை பயன்படுத்துகிறோம் என்று? காலப்போக்கில் அது வியாபாரமாக மாறிவிட்டது. பெயர் வைப்பவன் பணம் பரிக்கிறான், ஓதுபவன் பணம் கேட்கிறான். ஜல்லிக்கட்டு என பெயர் உருமாறி நமது உரிமையை பெறத் தடுக்கிறது . ஆங்கிலச் சொற்கள் கொண்ட வியாபார பொருட்கள் மீது மோகம் கொண்டு நமது சிறந்த பொருட்கள் காணாமல் போயிற்று.

இதைவிடக் கொடுமை என்னவென்றால் ” யாராவது முழுவதுமாக தமிழில் பேசினால்”, உடனே தூய தமிழ்ல பேசுறாராம் என்று நகைத்து அந்த முயற்சியை கைவிடசெய்வது. இதுவே ஆங்கிலத்தில் தவறாக பேசினால், நம்மை கேவலமாக கருதுவார்கள். ஆங்கிலம் தாய்மொழியா இல்லை தமிழ் எனக்கு தாய் மொழியா? ஆங்கிலத்தில் பிழையுடன் பேசுவதில் எந்த ஒரு வெட்கமும் நமது தேவை இல்லை. தாய்மொழியில் பிழையுடன் பேசுவதற்குத்தான் வெட்கப்பட வேண்டும். எனது பொறியியல் கல்லூரியில் உள்ள மிகச் சிறந்த ஆங்கில ஆசிரியர் கூட ஒருமுறை ” வேற்று நாட்டு மொழியில் ஒழுங்காக பேச முடியவில்லை என வருத்தப்படவே வேண்டாம். அது என்ன நமது தாய்மொழியா எளிமையாக பேசுவதற்கு? என்று கூறினார். சிந்திப்போம்!

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு இருக்கும். கிரேக்கம் இசை மொழி, லத்தீன் சட்டம் & அறிவியல் மொழி, பிரஞ்சு தூது மொழி. அனைத்து வளங்களும் சிறந்து விளங்கியதால் தான், நாம் வேற்று மொழிக்கே பெயர் சூட்டியுள்ளோம்; பிற நாட்டு கடவுளுக்கு கூட தமிழில் பெரியிட்டுள்ளோமே!. நம்மிடமில்லாத அறிவியலா?

தொல்காப்பியத்தில் உலக அறிவியலை செய்யுட்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது ; வாழ்வியலுக்கே இலக்கணம் கொண்டுள்ளது..
திருக்குறள் நாட்டு அரசியலைக்கூறுகிறது; திருமந்திரம் யோகப்பயிற்சிகளை கூறுகிறது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அறத்தைக் கூறுகிறது.
அன்பை போதிக்கும் பல நூறு நூல்களும், சித்த மருத்துவ நூல்களும் மலைபோல் குவிந்திருக்கின்றது.

உலகாளும் அரசர்கள் இருக்கும்போதே பொதுமக்களை கதாநாயகர்களாகக் கொண்டு, தவறிழைத்தால் அரசனுக்கும் தண்டனை உண்டு என ஐம்பெரும்காப்பியங்கள் படைத்து உலகிற்கே சிறந்த இனம் நாம் தான் என்று பெருமை சேர்க்கிறது நமது பைந்தமிழ்.

உவமைக்கு இலக்கணமே தமிழ் தான். அழகிய உவமைகளை நாமே உருவாக்கி புதுப்பெயரும் சூட்டலாம் நமது தலைமுறைகளுக்கு.

இன்று என்னுடன் தமிழ் பற்றோடு பேசும் பல நண்பர்கள்கூட, பிள்ளைகளுக்கு அவர்களுக்கு வாயில் நுழையாதபடி பிறமொழி கலந்து தான் பெயரிட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்து வருந்துகிறேன்.

 

தமிழ் இனத்தின் பெருமை வேண்டும் அனால் பிள்ளைகளுக்குப் பெயர் தமிழில் வைக்கமாட்டேன் என்பது
தாம் தனது பெற்றாரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு, தமக்கு குழந்தை பிறந்த பிறகு, தாம் ஒரு சிறந்த பெற்றோராக பிள்ளைகளுடன் என்றும் வாழவேண்டும் என்று நினைப்பது போல்.

வீழ்வது நாமாகினும்; வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற வசனங்களை சொல்லிக்கொள்வதினால் எப்பயனும் இல்லை.

அடையாளத்தை இழந்த ஒவ்வொருவனும் அகதிதான். பல மறைக்கப்பட்ட வரலாறுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டு தமிழின் தொனமையையும், அறிவியலையும் கண்டு உலகம் வியந்து பார்க்கும்போது அந்த புகழாரத்தில் தம்மை சேர்த்துக்கொள்ள தம் அடையாளத்தை வெளிப்படுத்தும் நாம், முதலில் மொழிச் சிதைவை நிறுத்த வேண்டும்.

சரி இனியாவது குழந்தைகளை அழைக்கும்போதாவது கண்மணியே, முத்தே, பவளமே, கயல்விழியே,  அமுதே என்று அழையுங்கள். அப்போதுதான் நீங்கள் துயரத்தில் இருக்கும்போது “மம்மி என்று சொல்லாமல் அம்மா என்று அன்புருகி அழுவார்கள்“.

 

எந்த அளவிற்கு நமது சுடர்தமிழ் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தால், இப்படி தமிழுக்கு கவிபாடியிருப்பார்கள்?

 

"தமிழுக்கு அமுதென்று பேர்!" - பாரதிதாசன்

 

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..." - திருமந்திரம்

 

"தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடை வழியாகும்;
அன்பே அவனுடை மொழியாகும்" - நாமக்கல் கவிஞர்

 

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்" - பாரதியார்

 

குறிப்பு:

90 சதவிகித தமிழ் சொற்கள் வாயின் முற்பகுதியிலிருந்தான் உச்சரிக்கப்படும். இதனால் நமது மூச்சு சிரமப்படாது.
விஷம் என்று சொல்லும்போது நாவின் அழுத்தமும் உள் அழுத்தமும் அதிகமாக இருக்கும். நஞ்சு என்று சொல்லிப்பாருங்கள். வாயின் முற்பகுதியில் இருந்து எளிமையாக மூச்சை பாதிக்காமல் வெளிவரும். கீழுள்ள வள்ளலாரின் பாடல் இதைக் கூறுகின்றது.

சாகாகலை தந்தது- தமிழ் மொழி 
ஆரவாரமில்லா மொழி- தமிழ் மொழி

பொருள்: 

தமிழ் உச்சரிப்பு சாகாக்கலைக்கு முக்கிய பங்காகும் என கூறுகிறார்.

தமிழில் பெயரிடுவோம்; நமது கலைகளைக் காப்போம்!

உங்கள் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன்.
நன்றி!
-சமரசம்

 

(பிறமொழிச்சொற்கள் கலப்பிற்கு மன்னிக்கவும்)

Please share !

சமரசம்

நானும் உங்களை போல் ஒரு தமிழ்க் காதலன். தமிழ் பற்றிய தகவல்களை சேகரித்துப் பகிர்வதற்காகவும், சுய கருத்துக்களை என் எழுத்தின் மூலம் சொல்வதற்க்காகவும் இணையத்தில் எழுதுகிறேன். மேலும் சங்க இலக்கியங்கள், தமிழ் வரலாறு, கலை, கணினி ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவன்.

2 thoughts on “தமிழ்ப் பெயர்

 • November 15, 2017 at 2:21 am
  Permalink

  தமிழ் பற்றி மிகவும் நல்ல கட்டுரை…நல்ல முயற்சி

  • December 9, 2017 at 10:51 pm
   Permalink

   மிக்க நன்றிங்க!
   தமிழில் உரையாடுவோம்! தாய்மொழி தமிழில் பெயரிடுவோம்!

Comments are closed.